கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது


கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.

மைசூரு:

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதன்காரணமாக இந்த ஆண்டு கே.ஆர்.எஸ். அணை இதுவரை முழுமையாக நிரம்பவில்லை.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் அதிகபட்சமாக 117 அடி வரை அணை நிரம்பியது. அதன்பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. இதனால் 97 அடி வரை அணை நீர்மட்டம் சரிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை குடகில் கனமழை கொட்டியதால், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது. தற்போது குடகில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 3-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 11,800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று அது 4,046 கனஅடி ஆக குறைந்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 101.08 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,490 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,276.42 அடி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,972 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று வினாடிக்கு 6,018 கனஅடியாக குறைந்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,490 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.


Next Story