அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது நீதித்துறை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது நீதித்துறை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டது, நீதித்துறை என்று அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில், இந்திய அமெரிக்கர்கள் சங்கத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய நாடு சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. நாடு, குடியரசாகி 72 ஆண்டுகள் ஆகி உள்ளது. ஆனால், ஒவ்வொரு அரசமைப்புக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பங்களிப்புகளையும், பொறுப்புகளையும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை.

எதிர்பார்ப்பு

ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி, அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், நீதித்துறையின் ஒப்புதலுக்கு தகுதியானவை என நினைக்கிறது. எதிர்க்கட்சிகளோ, தங்கள் அரசியல் நிலைப்பாடுகளையும், முகாந்திரங்களையும் நீதித்துறை முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளில் சரியான புரிதல்கள் இல்லாத நிலையில், இந்த தவறான சிந்தனை செழித்து வளர்கிறது.

அரசியல் சாசனத்துக்கு மட்டும்...

பொதுமக்களிடையே தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டுள்ள அறியாமைதான், ஒரே சுதந்திர அமைப்பான நீதித்துறையை வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இத்தகைய சக்திகளுக்கு உதவி வருகிறது.

நான் தெளிவாகச்சொல்கிறேன். அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நாங்கள் பதில் கூற வேண்டியவர்கள்.

இந்திய அரசியல் சாசனத்தின்கீழ், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய பணி, மக்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அந்தப் பணியை இதுவரையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நமது மக்களின் கூட்டு ஞானத்தில் சந்தேகப்படக்கூடாது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம், படித்த, நல்ல நிலையில் உள்ள வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புற வாக்காளர்கள் இந்தப்பணியை திறம்படச் செய்கிறார்கள்.

பன்முகத்தன்மை

இந்தியாவும், அமெரிக்காவும் அவற்றின் பன்முகத்தன்மையால் அறியப்பட்டுள்ளன. உலகமெங்கும் அவை மதிக்கப்பட வேண்டும், செழித்து வளர வேண்டும்.

அமெரிக்கா பன்முகத்தன்மையை மதிப்பதால்தான், நீங்கள் எல்லாரும் (அமெரிக்க வாழ் இந்தியர்கள்) இங்கு வர முடிந்திருக்கிறது. உங்கள் கடின உழைப்பால், சிறப்பான ஆற்றல்களால் முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது. அமெரிக்க சமூகத்தின் சகிப்புத்தன்மையும், அனைவரையும் பங்கேற்கச்செய்கிற இயல்பும்தான் உலகமெங்கும் உள்ள திறமையானவர்களை ஈர்க்கிறது. அதற்கு பிரதிபலனாக அவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

சமூகத்தின் அனைத்துப்பிரிவினரின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, பல்வேறு பின்னணியில் இருந்து வந்த தகுதிவாய்ந்த திறமைகளை கவுரவிப்பதும் அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story