மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராக ஜேபி நட்டா நியமனம்
மாநிலங்களவை கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாஜக எம்பியுமான ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, மேல்சபையின் 264வது கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. ஜனாதிபதி உரை முடிந்த உடன் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது மாநிலங்களவையின் புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், தேசிய பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டார். மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருக்கிறார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால் மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.