காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஜம்மு,
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் 18-ந்தேதி முதல்கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. அதனை தொடர்ந்து 26-ந்தேதி 2-ம் கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நேற்று நடந்தது. ஜம்மு உள்பட 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் களத்தில் 2 முன்னாள் துணை முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்பட 415 வேட்பாளர்கள் இருந்தனர்.
ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்கும் முன்பே வாக்குச் சாவடிகளுக்கு வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களை விடவும் நேற்றைய தேர்தலில் வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் 68.72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, காஷ்மீரில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 63.45 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.