பயிற்சி பெண் டாக்டர் கொலை: மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் - ஜிதன் ராம் மஞ்சி


பயிற்சி பெண் டாக்டர் கொலை: மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் -  ஜிதன் ராம் மஞ்சி
x

பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் டாக்டர் படுகொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் பயிற்சி பெண் டாக்டர் கொலை தொடா்பாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானா்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 7 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என அதிரடியாக கூறி இருந்தார்.

இதுதொடா்பாக அடுத்து நடைபெறும் அம்மாநில சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். மேலும் இதுதொடா்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானா்ஜி 2 முறை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார் . இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானா்ஜி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென்று மத்திய மந்திரி ஜிதன் ராம் மன்ஜி வலியறுத்தி உள்ளார்.

இதுதொடா்பாக நிருபா்களை சந்தித்து ஜிதன் ராம் மன்ஜி கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையாகி உள்ளார். இந்த சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக மம்தா பானா்ஜி வெட்கப்பட வேண்டும். எனவே பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு பொறுப்பேற்று மம்தா பானா்ஜி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சட்டம், ஒழுங்கு இரண்டும் மாநிலத்துக்கு உட்பட்டது.

அதை கையாள முடியவில்லை என்றால் மம்தா பானா்ஜி விலகி கொள்ளலாம். மற்றவா்களை இந்த வழக்கில் அவா் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். பயிற்சி பெண் டாக்டர் கொலையை சிபிஐ சரியாக விசாரித்து வருகிறது. அதனை குறுக்கிடும் வகையில் மம்தா பானர்ஜி செயல்படுகிறார். மேலும் வழக்கு தொடா்பான ஆதாரங்கள் அனைத்தையும் மம்தா பானா்ஜி அழிக்க முயற்சிக்கிறார் என குற்றம்சாட்டினார்.


Next Story