மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் எதிர்ப்பு


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் எதிர்ப்பு
x

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வனப்பாதுகாப்பு விதிகள்

மத்திய பா.ஜ.க. அரசு புதிதாக வனப்பாதுகாப்பு விதிகள்-2022-ஐ கொண்டு வந்துள்ளது. இந்த பாதுகாப்பு விதிகள், பழங்குடி மக்கள் மற்றும் பிற வனவாசிகளின் அதிகாரப்பறிப்பு, இடமாற்றம், இடப்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

ஜார்கண்ட் முதல்-மந்திரி எதிர்ப்பு

இந்த வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

வனப்பாதுகாப்பு விதிகள்-2022, உள்ளூர் கிராம சபையின் அதிகாரத்தை நீர்த்துப்போகச்செய்கின்றன. இது லட்சக்கணக்கான வனவாசி சமூகங்கள் குறிப்பாக ஆதிவாதிகளின் உரிமைகளைப் பறிக்கின்றன.

வன இடங்களை பிற நோக்கங்ளுக்காக பயன்படுத்துவதற்கு முன்பாக உரிய கிராம சபையின் முன்அனுமதியைப் பெறுவது கட்டாயம் என்ற முந்தைய விதிமுறையை நீக்கி விட்டது.

மக்கள் சம்மதமின்றி மரங்களை வெட்டல்...

வனங்களில் உள்ள மரங்களை தங்கள் மூதாதையர்களைப் போல பார்த்து வந்த மக்களின் சம்மதம் பெறாமல், அந்த மரங்களை வெட்ட வகை செய்திருப்பது, மரங்களின் உரிமையாளர்கள் நாம்தான் என்ற அந்த மக்களின் உணர்வின் மீதான தாக்குதல் ஆகும்.

32 பழங்குடி சமூகங்கள் வசிக்கிற மாநிலத்தின் முதல்-மந்திரி என்ற வகையில், வன உரிமைகள் சட்டம் 2006, புதிய வன பாதுகாப்பு விதிகள் 2022-ல் மீறப்பட்டிருப்பதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருவது எனது கடமை என்று கருதுகிறேன்.

காடுகளைச் சார்ந்து 20 கோடி மக்கள்...

இந்தியாவில் 20 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக காடுகளைத்தான் சார்ந்துள்ளனர். 10 கோடி மக்கள் வனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில்தான் வாழ்கிறார்கள். இந்த நிலையில் வனப்பாதுகாப்பு விதிகள்-2022, வனங்களை பல தலைமுறைகளாக தங்கள் வீடுகளாக கருதுகிற இந்த மக்களின் உரிமைகளை வேரோடு பிடுங்கிப்போட்டு விடும். அவர்களின் பாரம்பரிய நிலங்கள், மேம்பாடு என்ற பெயரால் பறிக்கப்பட்டு விடும். அவர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டு விடும்.

'உறுதி செய்ய வேண்டும்'

இதில் நீங்கள் தலையிட்டு முன்னேற்றம் என்ற போர்வையில் பழங்குடி இன ஆண்கள். பெண்கள், குழந்தைகளின் குரல்கள் ஒடுக்கப்படாமல் இருக்க உறுதிப்படுத்த வேண்டும். நமது சட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story