ஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்; சிறப்பு படை வீரர்கள் 500 பேர் குவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப நாட்களாக தோடா, கத்துவா மற்றும் ரியாசி பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து 50 முதல் 55 பயங்கரவாதிகள் வரை ஊடுருவியுள்ளனர் என ராணுவத்தினருக்கு உளவு தகவல் கிடைத்தது. பயங்கரவாத செயல்களை இந்த பகுதியில் வளர்த்தெடுக்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தின் சிறப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் தரைமட்ட பணியாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றும் நுண்ணறிவு அமைப்பினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி பாதுகாப்பு வட்டாரங்கள் வெளியிட்ட செய்தியில், பயங்கரவாதிகளை அழிப்பதற்காக நவீன ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.
இந்த பகுதியில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் இந்திய ராணுவம் முன்பே 3,500 முதல் 4 ஆயிரம் வீரர்கள் அடங்கிய குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேபோன்று, ரோமியோ மற்றும் டெல்டா படைகள் உள்பட ராஷ்டீரிய ரைபிள்ஸ் படையினர் மற்றும் பிற படை பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.
காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 6 வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து, தோடா, கத்துவா மற்றும் ரியாசி பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
சமீபத்தில் தோடா மாவட்டத்தின் கோடி வன பகுதிகளில் இரவில் நடந்த தாக்குதலில் கேப்டன் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். இந்த சூழலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பற்றிய உளவு தகவல்கள் கிடைத்ததும், கூடுதலாக சிறப்பு ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.