ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு


ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு - நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x

காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் மாநில அந்தஸ்தை இழந்தது.

புதுடெல்லி,

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவுப்படி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா மூலம் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது.

அத்துடன், காஷ்மீர் என்றும், லடாக் என்றும் 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால் மாநில அந்தஸ்தையும் காஷ்மீர் இழந்தது.

காஷ்மீரில் சட்டசபை இருக்கிறது. லடாக்கில் சட்டசபை இல்லை. எனவே காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கிடையே, 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு தனது விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொடர்ந்து 16 நாட்கள் இந்த விசாரணை நடைபெற்றது.

இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக கடந்த செப்டம்பர் -5 -ம் தேதி அறிவித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


Next Story