பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 'பீட்சா' ஆர்டர் செய்து சாப்பிட்ட ஐ.டி. ஊழியர்


பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஐ.டி. ஊழியர்
x

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் ஐ.டி. ஊழியர் ‘பீட்சா’ ஆர்டர் செய்து சாப்பிட்டார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்கள் எண்ணிக்கையால் போக்குவரத்து பாதிப்பு உயருகிறது. உலக அளவில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஐ.டி. ஊழியர் ஒருவர் 'பீட்சா' ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. மிலாது நபி, வாரவிடுமுறை நாட்கள், காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை ஆகும். அதனால் பெங்களூருவில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். பெங்களூரு நகரை விட்டு நேற்று முன்தினம் இரவு பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் சென்றதால், பெங்களூரு சாலைகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக எலெக்ட்ரானிக் சிட்டி, பெல்லந்தூர், ஓசூர் சாலை, மைசூரு சாலை, வெளிவட்ட சாலைகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் ஒருவர் தனது குடும்பத்துடன் காரில் ஊருக்கு புறப்பட்டார். அவர் வெளிவட்ட சாலையில் தனது காரில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களது கார் அங்கேயே நின்றது. இதற்கிடையே அவர்களுக்கு பசி எடுத்த நிலையில், ஐ.டி. ஊழியர் 'பீட்சா' ஆர்டர் செய்தார். அதன்படி குறித்த நேரத்திற்குள் விற்பனை பிரதிநிதி வந்த பீட்சாவை கொடுத்தார். இதில் சுவாரசியம் என்வென்றால், பீட்சா ஆர்டர் செய்யப்பட்டு, அதை பெறும் வரை அவர்களது கார் குறிப்பிட்ட மீட்டர் தூரத்தை கூட கடக்கவில்லை என்பது தான். இதை ஐ.டி. ஊழியர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story