அரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறாரா வினேஷ் போகத்?
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை இன்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்துள்ளார்.
புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வருகிற அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வருகிற அரியானா தேர்தலில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்திந்தனர். இவர்களுடைய சந்திப்பு அரசியல் கட்சிகள் இடையே மேலும் பேசு பொருளாகியுள்ளது.
அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.