கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி
வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட கூறினார்.
பெங்களூரு:
பொருளாதார சுமை
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில் கோலார் தங்கவயல் தொகுதி உறுப்பினர் ரூபா கலா சசிதர் கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைப்பது என்பது கடினம். அதனால் கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மேம்படுத்தி அங்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
வேலை வாய்ப்பு
கோலார் தங்கவயல், பெங்களூருவுக்கு அருகில் இருந்தாலும் அங்கு தொழில் நிறுவனங்கள் இல்லை. அங்கு தங்க சுரங்கம் மூடப்பட்ட பிறகு வேலை வாய்ப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு 1,870 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 971 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதுகுறித்து தொழில்துறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அந்த நிலம் வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு மாற்றப்படும். அங்கு முழுமையான தொழிற்பேட்டை அமைத்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
முருகேஷ் நிரானி
முன்னதாக பதிலளித்து பேசிய தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, 'வருவாய்த்துறையின் வசம் உள்ள அந்த நிலத்தை தொழில்துறைக்கு மாற்ற கோரி நாங்கள் பலமுறை கடிதம் எழுதியுள்ளோம். அந்த நிலத்தை எங்களுக்கு வழங்கினால் கர்நாடக தொழில் வளா்ச்சி வாரியம் மூலம் அதை புனரமைத்து தொழிற்பேட்டையை அமைப்போம். அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குவோம்' என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.வி.தேஷ்பாண்டே, 'அரசு துறைகளில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவது என்பது கடினமான பணி அல்ல. இது மிகவும் சுலபமாக நடைபெறும் பணி. பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்ப ரூ.3 கோடி வரை உள்ளது. இவ்வளவு பணம் கொடுத்து நிலத்தை வாங்கி தொழிற்பேட்டை அமைப்பது கடினமான ஒன்று. இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
முன்னதாக பேசிய உறுப்பினர் ரூபாகலா சசிதர், 'கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டையை அமைப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனது தொகுதி மக்கள் என்ன செய்ய வேண்டும்?. அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?.
இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்படாமல் இருப்பது ஏன்?. பெங்களூருவில் இருந்து கோலார் தங்கவயலுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் கூட கிடையாது. இங்கு இருக்கும் மக்களில் பெரும்பாலோனர் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அதனால் இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டு இந்த திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும்' என்றார்.
எழுத்துப்பூர்வமாக பதில்
தொழில்துறை மந்திரிமுருகேஷ் நிரானி சார்பில் ரூபா கலா சசிதருக்கு எழுத்து மூலமாக வழங்கிய பதிலில், 'கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை தாலுகாவில் தொழிற்சாலை அமைக்க பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு 1,870 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோலார் மாவட்ட கலெக்டர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 971 ஏக்கர் நிலத்தை திரும்ப எடுத்து கொள்ளும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த நிலத்தை தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு ஒதுக்குமாறு கோரி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச், ஆகஸ்டு, டிசம்பர் மாதங்களில் வருவாய்த்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்த நிலம் இன்னும் தொழில்துறைக்கு ஒதுக்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.