இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்திய சாவித்ரி ஜிண்டால்


இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்திய சாவித்ரி ஜிண்டால்
x

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கவுரவத் தலைவராக உள்ள சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 87% உயர்வுகண்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கவுரவத் தலைவர் சாவித்ரி ஜிண்டால், விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

சாவித்ரி ஜிண்டாலின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.2.08 லட்சம் கோடி), அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலராகவும் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) உள்ளது.

சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 87% உயர்வுகண்டுள்ளது. இதே காலகட்டத்தில் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 42% சரிந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி 3-வது இடத்தில் இருந்தார். அதன்பிறகு அவரது சொத்து மதிப்பு 42% சரிந்த நிலையில் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6-வது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார்.

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரூ.7.69 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். ரூ.7.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 2-ம் இடத்தில் உள்ளார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 13வது இடத்திலும், அதானி 14வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story