இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்


இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 28 March 2024 5:10 PM IST (Updated: 28 March 2024 6:01 PM IST)
t-max-icont-min-icon

சாவித்ரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் (வயது 84) காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். ஹிசார் தொகுதியில் நடந்த பா.ஜ.க.வின் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, முன்னால் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் சாவித்ரி ஜிண்டால் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், "ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில மந்திரியாக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின் பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, மக்களவை தேர்தலில் நவீன் ஜிண்டால் குருக்ஷேத்ரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.


Next Story