இந்தியாவின் மக்கள் தொகை 2054-ல் உச்சம் தொடும்.. ஐ.நா. சபையின் கணிப்பு எவ்வளவு தெரியுமா?


india population
x

இந்த ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (மக்கள் தொகை பிரிவு) தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் தொகை அடுத்த 50-60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 820 கோடியாக (8.2 பில்லியன்) இருக்கும் மக்கள் தொகை, 2080-களின் மத்தியில் சுமார் 1030 கோடியாக (10.3 பில்லியன்) உச்சத்தை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 1020 கோடியாக (10.2 பில்லியன்) இருக்கும்.

கடந்த ஆண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்த இந்தியா, 2100-ம் ஆண்டு வரை முதலிடத்தில் நீடிக்கும். இந்த நூற்றாண்டு முழுவதும் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும்.

2024-ல் இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2054-ல் உச்சபட்சமாக 169 கோடியாக உயரும். அதன்பிறகு, படிப்படியாக குறையத் தொடங்கும். 2100-ம் ஆண்டின் இறுதியில் 150 கோடியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை இந்த ஆண்டு 141 கோடியாக உள்ளது. அது, 2054-ல் 121 கோடியாக குறையும். அதன்பிறகும் படிப்படியாக குறைந்து 2100-ம் ஆண்டில் 63.3 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024 மற்றும் 2054-க்கு இடையில் சீனா மிகப்பெரிய மக்கள் தொகை இழப்பை சந்திக்கும் (20 கோடி) என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் (2.1 கோடி இழப்பு) மற்றும் ரஷியா (1 கோடி இழப்பு) ஆகிய நாடுகள் உள்ளன. அதேசமயம், சீனாவைப் பொருத்தவரை நீண்ட கால மக்கள்தொகை கணிப்புகள் நிச்சயமற்றவை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் உடனுக்குடன் அறிந்துகொள்ள https://x.com/dinathanthi


Next Story