இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி... நாட்டின் 50 சதவீத செல்வம் 100 பணக்காரர்களிடம் உள்ளது - ராகுல் காந்தி


இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி... நாட்டின் 50 சதவீத செல்வம் 100 பணக்காரர்களிடம் உள்ளது - ராகுல் காந்தி
x

image courtesy: Congress twitter

இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி; ஆனால் நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

பானிபட்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது அரியானாவை சென்றடைந்துள்ளது. அரியானா மாநிலத்தின் இரண்டாம் கட்டப் பயணத்தின் முதல் நாளான இன்று காலை பானிபட்டில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியது.

பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, தீபேந்தர் சிங் ஹூடா, கரண் சிங் தலால், உதய் பன், குல்தீப் சர்மா உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியுடன் யாத்திரையில் கலந்து கொண்டனர். இன்று மதியம், பானிபட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற மூத்த தலைவர்கள் உரையாற்றினர். அப்போது பேசிய ராகுல்காந்தி கூறியதாவது:-

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 112 நாட்களை நிறைவு செய்துள்ளது. பானிபட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

என் மனதில் ஒரு கேள்வி இருக்கிறது. நாட்டின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. ஆனால் நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. இதில் உங்களுக்கு நியாயம் இருப்பதாக தெரிகிறதா? இதுதான் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் யதார்த்தம். இந்தியாவின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பார்த்தால், 90 சதவீத லாபம் 20 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளது.

இந்த அரசாங்கம் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது. ஒரு இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்கள் வாழ்கிறார்கள். மற்றொரு இந்தியாவில் அனைத்து செல்வங்களும் கொண்ட 200-300 பேர் வாழ்கின்றனர். உங்களுக்கு ஒன்றுமேயில்லை. உங்களால் சுவாசிக்க முடியாத இந்த பானிபட் காற்று மட்டுமே உள்ளது. இது புற்றுநோய்.

பானிபட் குறுந்தொழில்களின் மையமாக இருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழித்துவிட்டது. இதுவே முழு நாட்டின் கதையாக உள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவை நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்தியாவிலேயே வேலையின்மையில் அரியானா 38 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

மாநிலத்தின் ஆற்றல் வீணாகப் போகிறது. அக்னிவீரர் கொள்கை என்ன? இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்போது நம்பிக்கையிழந்துள்ளனர். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் 80,000 இளைஞர்களை ராணுவத்தில் அரசு நியமிக்க உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவிகிதத்தினர் மட்டுமே வேலை பெறுவர். மீதமுள்ளவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story