மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரெயில் கட்டண சலுகை கிடைக்குமா? - ரெயில்வே மந்திரி விளக்கம்
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரெயில்களில் கட்டண சலுகை அளிப்பது தொடர்பாக ரெயில்வே மந்திரி விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.
சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:- பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.
ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போது, 'வந்தே பாரத்' ரெயில்கள் இருக்கை வசதியுடன் அதிகபட்சம் 500 அல்லது 550 கி.மீ. தூரம்வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி அமலுக்கு வந்த பிறகு நீண்ட தூரத்துக்கு 'வந்தே பாரத்' ரெயில்கள் இயக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு, நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் அயோத்தியுடன் ரெயில்கள் மூலம் இணைக்கப்படும்.நாட்டில், 41 பெரிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மீதி ரெயில் நிலையங்கள், படிப்படியாக சீரமைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் ரெயில்வேயை மாசு இல்லாததாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதும் அவற்றில் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்