சீன, பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த ஹவிட்ஜர் பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் முடிவு செய்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையையொட்டி நிறுத்துவதற்காக ஹவிட்ஜர் ரக பீரங்கிகளை வாங்குவதற்கு இந்திய ராணுவம் முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி ரூ.8 ஆயிரத்து 244 மதிப்பிலான முன்மொழிவு ஒன்றை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம், இந்திய ராணுவம் அளித்து உள்ளது. அதுபற்றி ஆலோசித்து, பாதுகாப்புக்கான கேபினட் குழுவின் ஒப்புதலை பெறுவதற்காக முன்மொழிவு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன்படி, ஏ.டி.ஏ.ஜி.எஸ். எனப்படும் திறன் வாய்ந்த 307 பீரங்கிகளை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரக பீரங்கிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. முதன்முறையாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹவிட்ஜர் பீரங்கிகள் ஏறக்குறைய 50 கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் திறன் படைத்தவை. இதற்காக படையினர் பல்வேறு உயரங்கள் மற்றும் தரை பகுதிகளில் இவற்றை வைத்து பரிசோதனை நடத்தி உள்ளனர்.
இதன் வழியே அதன் பயன்பாடு பற்றி அறிந்து தங்களை ராணுவத்தினர் மேம்படுத்தி கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 26 மற்றும் மே 2 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பொக்ரான் தளத்தில் வைத்து பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஹவிட்ஜர் பீரங்கிகளின் வடிவம் மற்றும் மேம்படுத்துதல் பணிகளை புனே நகரத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ. அமைப்புடன் இணைந்து பிற டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்களும் ஈடுபட்டு உள்ளன.
இதன் தொழில் நுட்பம் மற்றும் பிற விசயங்களை பற்றி 2 தனியார் நிறுவனங்களுக்கு விவரங்கள் பகிரப்பட்டு உள்ளன. இதன்படி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் போர்ஜ் ஆகிய இரு தொழிற்சாலைகளுடன் இணைந்து பிற தொழிற்சாலைகளும் இந்த பீரங்கிகளின் உற்பத்தியில் ஈடுபட உள்ளன.