பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை


பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
x

Image Courtacy: PTI

பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி,

சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்‌ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் நாட்டின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவுப் பொருட்களின் விலைகள் மீதான வினியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும்.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.

வேகமாக வளரும் பொருளாதாரம்

பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படப் போகிறது. ஆனால் இந்தியாவுக்குள், விவசாய பொருட்கள் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் இருக்கிறோம்.

நல்ல, வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன்.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு மலிவு விலைகள் இருக்க வேண்டும், நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும்.

ரஷிய இறக்குமதி

எல்லாவற்றுக்கும் மேலாக உலகளாவிய பொது பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், அது நம்மில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

பல நாடுகளைப் போலவே, ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரஷியாவிலிருந்து வாங்குவதற்கு விலை காரணி சாதகமாக உள்ளது. இதில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story