நாட்டின் எல்லை பாதுகாப்பில் சமரசம் கிடையாது - மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டம்


நாட்டின் எல்லை பாதுகாப்பில் சமரசம் கிடையாது - மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டம்
x

நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் தனியார் அறக்கட்டளையின் சார்பில், 'நாளைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு: இந்தியாவின் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது வெளியுறவு மற்றும் உள்நாட்டு கொள்கை தெளிவாக உள்ளது. மற்ற நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். அதே சமயம் நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது. அரசின் இந்த கொள்கையை மற்ற நாடுகள் மதித்து வருகின்றன.

சமாதான கொள்கையின் காரணமாக, கடந்த அரசாங்கங்கள் பல உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்கின. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதம் நிறைந்த இடங்கள் ஆகிய 3 பகுதிகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பகுதிகளாக இருந்தன. கடந்த அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாகவே இந்த நிலை உருவாகின.

பிரதமர் மோடி அரசாங்கத்தால் அந்த 3 பகுதிகளும் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. மேலும் அந்த பகுதிகள் இப்போது இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் ஒரு அங்கமாக உள்ளன.

புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் நீதி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இவை மிகவும் நவீன சட்டங்களாக இருக்கும் என்று அமித்ஷா கூறினார்.


Next Story