"ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக இந்தியா சரியாகக் கருதப்படுகிறது..." - கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ்


ஒருமித்த கருத்தை உருவாக்குபவராக இந்தியா சரியாகக் கருதப்படுகிறது... - கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ்
x

கிரீஸ் பிரதமர் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டு தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.

நேற்று காலை, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கிரீஸ் பிரதமர் மரியாதை செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார். பின்னர், பிரதமர் மோடியை சந்தித்து கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடித்தது. வர்த்தகம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, பயங்கரவாத எதிர்ப்பு, மருத்துவ சாதனங்கள் உற்பத்தி, புத்தாக்கம், திறன் மேம்பாடு, வேளாண்மை, விண்வெளி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "16 ஆண்டுகளுக்கு பிறகு கிரீஸ் பிரதமர் வந்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு. பல்வேறு பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசினோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் இந்தியாவும், கிரீசும் ஒரேமாதிரி அக்கறை கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி விரிவாக விவாதித்தோம்.

2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக விரிவாக்குவதை நோக்கி நாங்கள் நடைபோட்டு வருகிறோம். இந்தியாவில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இணைந்து செயல்பட புதிய வாய்ப்புகளுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும். இடம்பெயர்வு மற்றும் நகர்தல் ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க இருவரும் ஒப்புக்கொண்டோம்.

இந்த ஒப்பந்தம், கிரீசில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், இரு நாடுகளுக்கிடையே மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் எளிதாக சென்று வரவும் வழிவகுக்கும். அனைத்து சர்ச்சைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம்" என்று அவர் கூறினார்.

இதனிடையே ரைசினா உரையாடலின் தொடக்க நாளில் உரையாற்றிய கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ், "சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்கு வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இது உலகளாவிய தெற்கில் முன்னணி ஜனநாயகம். திசையை வடிவமைக்கும் போது. உலகளாவிய விவாதம் மற்றும் பெரும் சவால்களை எதிர்கொள்வதில், இந்தியா பெரும்பாலும் ஒருமித்த கருத்தை உருவாக்குபவராகக் கருதப்படுகிறது.

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா. கடந்த ஆண்டுகளில் கிரீஸ் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டிலும் இல்லாத சில வேகமான வளர்ச்சி விகிதங்களை அனுபவித்து வருகிறது. பரஸ்பர முதலீடு என்பது நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய குறிக்கோளானது எங்களிடம் ஏற்கனவே உள்ளது என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உணவு பதப்படுத்துதல், கடல்சார் மற்றும் விமான போக்குவரத்து, தளவாடங்கள் உட்பட பல துறைகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க கிரேக்க முதலீடுகள் பல உள்ளன" என்று அவர் கூறினார்.


Next Story