ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.