உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிறை கட்டி விட்ட சம்பவம்; முதல்-மந்திரி அதிரடி


உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிறை கட்டி விட்ட சம்பவம்; முதல்-மந்திரி அதிரடி
x

என்னால் குனியவோ மற்றும் காலணி கயிறை கட்டவோ முடியாமல் இருந்தேன் என அவர் கூறியுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் சிங்ராவ்லி மாவட்டத்தில், சித்ராங்கி நகரில் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றுபவர் அஸ்வன்ராம் சிராவன். இந்நிலையில், பெண் அதிகாரி ஒருவர் இவருடைய காலணியின் கயிறை கட்டி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றிய புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்-மந்திரி மோகன் யாதவ் உத்தரவிட்டு உள்ளார்.

இதுபற்றி அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இது தீவிர கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கும்படி நான் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன்.

எங்களுடைய அரசில் பெண்களுக்கான மதிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்து உள்ளார். எனினும், இந்த சம்பவம் பற்றி சிராவன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முழங்கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. அதன்பின் நடக்கும்போதும் மற்றும் அமரும்போதும் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.

என்னுடைய பணியாளர் எனக்கு உதவிகள் செய்வது வழக்கம். கடந்த 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சித்ராங்கியில் உள்ள அனுமன் கோவிலில், மத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அப்போது, என்னுடைய காலை கொண்டு காலணிகளை நான் கழற்றினேன். விழா முடிந்ததும், காலணிகளை நான் அணிந்து கொண்டேன். ஆனால், காலணி கயிறு கட்டப்படாமல் இருந்தது.

என்னால் குனியவோ மற்றும் காலணி கயிறை கட்டவோ முடியாமல் இருந்தேன். அப்போது, எனது பணியாளர்களில் ஒருவரான நிர்மலா தேவி வந்து, கயிறு கட்டுவதற்கு உதவினார். அவர் அப்படி செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிடவில்லை என்று பதிலாக கூறியுள்ளார்.


Next Story