உத்தரபிரதேசத்தில் நோயாளியைப்போல் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்த சப்-கலெக்டர்
சப்-கலெக்டர் சோதனையில் சுகாதார நிலையத்தில் இருந்த மருந்துகள் பாதி காலாவதியாகி இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
தொடர் புகாரின் காரணமாக, அம்மாவட்ட சப்-கலெக்டர் கிருதி ராஜ் ஒரு நோயாளி போல அந்த மருத்துவரிடம் பேசி முன்பதிவு பெற்றுள்ளார். அதன்பிறகு அந்த சுகாதார மையத்திற்கு சென்ற கிருதி ராஜ், முக்காடு போட்டுக் கொண்டு, நோயாளியை போல அந்த மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது கிருதியிடம் அலட்சியமாக பேசிய மருத்துவர் பிறகு அவர் சப்-கலெக்டர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கிருதி ராஜ் கூறும்போது, "நான் முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் மருத்துவரிடம் சென்றேன். ஆனால் நோயாளிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு அந்த மருத்துவர் நடந்துகொள்ளவில்லை.
வருகைப் பதிவேட்டை நான் சரிபார்த்தபோது ஊழியர்களில் சிலர் பணிக்கு வரவில்லை. பதிவேட்டில் கையெழுத்து போட்டவர்கள் சிலர் அங்கு இல்லை. மருந்துகளை பரிசோதித்தபோது பாதி மருந்துகள் காலாவதியாகி இருந்தன. நோயாளிகளுக்கு ஊசியும் முறையாக செலுத்தப்படவில்லை. இந்த சேவைக் குறைபாடு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
கிருதி ராஜ் மற்ற நோயாளிகளுடன் சுகாதார நிலையத்தில் காத்திருப்பது, மருந்தகத்தில் மருந்து ஸ்டாக்கை சரிபார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.