இரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்


இரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்
x

வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 6 பெண்கள் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

ஜலந்தர்,

பஞ்சாப்பின் கபுர்தலா மாவட்டத்தில் பக்வாரா பகுதியில் இரவில் சிலர், அந்த வழியே தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இதுபற்றி முறையான புகார் இல்லாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், பியாஸ் நகரை சேர்ந்த வரீந்தர் சிங் என்பவர் இரவில் செல்லும்போது, அவரிடம் இளம்பெண்கள் சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இதேபோன்று சத்னம்புரா பகுதியை சேர்ந்த அரவிந்தர் குமார் என்ற சபி என்பவருக்கும் இதேபோன்ற அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது.

இதுபற்றி அவர்கள் இருவரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், பக்வாரா நகரில் ஜி.டி. சாலையில் இரவில் தனியாக செல்ல கூடிய ஆண்களை இளம்பெண்கள் சிலர் ஆசை காட்டி தனியாக அழைத்து செல்கின்றனர்.

இதன்பின்னர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர் என தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சத்னம்புரா பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தின் உயரதிகாரி கவுரவ் தீர் கூறும்போது, அருகேயுள்ள ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களை எடுத்து கொண்டு இளம்பெண்கள் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களில் சிலர் 20 வயதுடையவர்கள். மறைவான இடங்களில் பதுங்கி கொள்வார்கள்.

இதனை யாராவது பார்த்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பொய்யான வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டி அவர்களை இளம்பெண்கள் அனுப்பி விடுவது வழக்கம் என கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் யாரும் கல்லூரி மாணவிகள் இல்லை. அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு, நைஜீரியா, தாய்லாந்து மற்றும் கானா நாடுகளை சேர்ந்த 14 பேர் உள்பட 32 பேரை பக்வாரா போலீசார் கைது செய்திருந்தனர். பஞ்சாப்பில் பல இடங்களில், இரவில் லிப்ட் கேட்பது போன்று வழியை மறித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், பக்வாரா நகரின் மஹிரு கிராமத்தில் இரவில் உணவு விடுதியருகே சென்ற தொழிலதிபரை இதுபோன்று கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்கள் சிலர் திருட்டில் ஈடுபட்டனர். பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என அவரை மிரட்டியும் உள்ளனர். இந்த வழக்கில், உகாண்டா மற்றும் தான்சானியா நாடுகளை சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story