2 மாணவர்கள் கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இம்பால்,
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
புகைபடங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புகைபடங்களில் பிணமாக கிடந்த இருவரும் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17,19 வயது மாணவர்கள் எனவும் கடந்த ஜூலை மாதம் இவர்கள் காணாமல் போனவர்கள் என தெரியவந்தது.
ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைபடங்கள் வெளியாகி மணிப்பூரை மீண்டும் அலற வைத்துள்ளது.
கொலையான மாணவர்களின் சடலங்கள் எங்கு கிடக்கிறது என இடம் தெரியாமல் போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து விரைவான நடவடிக்கை எடுத்து உடல்களை கண்டறியுமாறு காவல்துறைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.