இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி தொடங்கினார். இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த மாதம் ஒலிபரப்பானது.
இந்நிலையில், 108வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் விண்வெளி, விளையாட்டு என பல துறைகளில் பல்வேறு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களையும் வென்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்களின் செயல்பாடு மூலம் நமது வீரர்கள் நாட்டு மக்களின் மனங்களை வென்றனர்.
அடுத்து, 2024-ல் பாரிஸ் ஒலிக்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக, ஒட்டுமொத்த தேசமும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. 2024-ம் ஆண்டிலும் அதே உற்சாகத்தையும் வேகத்தையும் நாம் பராமரிக்க வேண்டும். இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும்.
உடல் ஆரோக்கியம் குறித்த ஆர்வம் நாட்டு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அதற்கான பயிற்சியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஜோகோ டெக்னாலஜிஸ் போன்ற புத்தாக்க நிறுவனங்கள், பிட் இந்தியாவின் கனவை நனவாக்க பங்களிக்கின்றன.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு வந்தவர்களோடு நான் செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் உரையாடினேன். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் இந்தியில் உரையாற்றினேன். அதனை அவர்கள் தமிழில் அப்போதே கேட்டார்கள். மொழிபெயர்ப்பு சார்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து இளைஞர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.