கோலாரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் புதர் மண்டி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
கோலாரில் ரெயில்வே சுரங்கப்பாதையில் புதர் மண்டி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் நகரசபைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
புதர் மண்டி கிடக்கும் சுரங்கப்பாதை
கோலார் டவுனில் மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்ய நகரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல், நகரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைகளும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அங்கு புதர் மண்டி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதேபோல், கோலார் டவுன் பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ரெயில்வே சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதை புதர் மண்டி கிடக்கிறது.
நகரசபைக்கு கண்டனம்
சுரங்கப்பாதையின் கீழ் 2 வழிகள் இருந்தாலும் அதில் ஒரு வழிப்பாதை முழுவதும் புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஒரு பாதையை மட்டும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் சாலையும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இதன்காரணமாக புதரை அகற்ற வேண்டும் என்றும், சுரங்கப்பாதையை சீரமைக்க வேண்டும் என்றும் நகரசபையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல என தெரிகிறது.
இதனால் நகரசபைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ரெயில்வே சுரங்கப்பாதைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகரசபைக்கு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.