விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை


விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
x

விபத்தில் தொழிலாளி பலியான வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோா்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

உடுப்பி;

உடுப்பி டவுன் டயானா சந்திப்பு சாலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தொழிலாளியான கணேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே சம்பத்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, கணேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த கணேஷ், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் சம்பத்குமார், வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை உடுப்பி கோர்ட்டில் நடத்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹியாம் பிரகாஷ் தீர்ப்பு வழங்கினர்.

இதில் சம்பத்குமார் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கபட்டார்.


Next Story