தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் சட்டவிரோத பெட்ரோல்-டீசல் விற்பனை
மொலகால்மூருவில் தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் சட்டவிரோத பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிக்கமகளூரு:
சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு-சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் வடமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. அவ்வாறு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள், மொலகால்மூரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் லாரிகளை நிறுத்தி சாப்பிட்டு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சரக்கு லாரி டிரைவர்களில் சிலர், உணவகங்களில் சாப்பிட நிற்கும்போது, தங்கள் உரிமையாளருக்கு தெரியாமல் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசலை திருடி அதனை குறைந்த விலைக்கு நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட கடைகளில் விற்பனை செய்வதாக தெரிகிறது.
லாரி டிரைவர்களிடம் இருந்து திருட்டு பெட்ரோல், டீசலை வாங்கும் கடை உரிமையாளர்கள், அதனை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது, 15 ரூபாய்க்கு குறைவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ேதசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போதிய வருவாய் இன்றி அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோலை திருடி விற்கும் லாரி டிரைவர்கள், அதனை வாங்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.