"இதை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால்.." தேர்தல் ஆணையர் பதவி விலகியதும் காங்கிரஸ் விடுத்த எச்சரிக்கை


இதை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால்.. தேர்தல் ஆணையர் பதவி விலகியதும் காங்கிரஸ் விடுத்த எச்சரிக்கை
x

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையர் விலகியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

புதுடெல்லி:

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேவின் பதவிகாலம் கடந்த மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் ஆணையர் அருண் கோயலின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் செயலாளராக இருந்த அருண் கோயல், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது. இப்போது, நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் விலகியதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக காங்கிரசார் குற்றம்சாட்டுகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையர் விலகியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. சர்வாதிகாரத்தால் ஜனநாயகம் அபகரிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:-

தேர்தல் கமிஷனா அல்லது தேர்தல் ஒமிசனா? (Election Commission or Election OMISSION?) இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இப்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். நான் ஏற்கனவே கூறியதுபோல், நமது சுதந்திர அமைப்புகள் அழிந்துபோவதை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், சர்வாதிகாரத்தால் நமது ஜனநாயகம் அபகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story