உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்ப்பு
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
புதுடெல்லி,
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது, 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி, தாக்குதல் நடத்த முடியும்.
இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் முறைப்படி சேர்க்கப்படுகிறது.
இதற்கான விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.