தேர்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் 'இந்தியா' கூட்டணி உண்மையிலேயே சவால்தான் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேட்டி


தேர்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் இந்தியா கூட்டணி உண்மையிலேயே சவால்தான் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2023 4:30 AM IST (Updated: 7 Oct 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

‘இந்தியா’ கூட்டணி, உண்மையிலேயே சவாலானதுதான். எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது இல்லை. அடிமட்ட தொண்டர்கள் முதல் மேலிட தலைவர்கள் வரை ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.

பிரதமர் மோடி எங்களை முன்வரிசையில் நின்று வழிநடத்துகிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, பிரதமர் மோடி 3-வது தடவையாக நாட்டுக்கு சேவையாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் செயல்திட்டம்.

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி, பா.ஜனதாவுக்கு உண்மையிலேயே சவாலானதுதான். மாநிலங்களவை எம்.பி.யான நான், இத்தேர்தலில் ஒடிசாவில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளேன்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிப்பதில் பிரதமர் மோடி முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

மகளிர் மசோதாவை காங்கிரஸ் கட்சி காலாவதி ஆக செய்து விட்டது. தனது ஆட்சிக்காலத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அதன் கைகளை யாரும் கட்டிப்போடவில்லை. மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு இருந்தபோதிலும், அவர்கள் அதை செய்யவில்லை.

நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், அவரது குடும்ப கட்சி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், நலிந்த பிரிவினருக்கும் என்ன செய்தது என்பதை சொல்ல தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story