ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு


ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 27 பேர் பலி; சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு
x

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில், வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர்.

இவற்றில், தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் உயிரிழந்து உள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றனர்.

கனமழை மற்றும் வெள்ளம் தொடர்ச்சியாக, 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், பல ரெயில்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டும் உள்ளன.

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஆகியோரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி கூறியுள்ளார்.

கனமழையை முன்னிட்டு ஐதராபாத் நகரில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.


Next Story