'பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை நடத்துங்கள்' - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில்களில் கொரோனா வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கு கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி நிலவரப்படி 64 கோடியே 89 லட்சத்து 99 ஆயிரத்து 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அது வரையில் அவர்களில் 8 சதவீதத்தினர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட பெருமளவில் மக்கள் வராததால், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்தியாவில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
இதையொட்டி மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மாநிலங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அவை வருமாறு:-
* கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களை பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், புனிதப்பயண வழித்தடங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் (கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவை) என மக்கள் கூடும் இடங்களில் நடத்துங்கள். தகுதி வாய்ந்த மக்களில் அதிகமானோர் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளச்செய்யுங்கள்.
* கோவேக்சின், கோவிஷீல்டு என எந்த தடுப்பூசிகளின் 2 டோஸ்களை செலுத்தி இருந்தாலும், அவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
* தடுப்பூசிகள் வீணாகாமல் தடுக்கிற வகையில், முதலில் சீக்கிரமாக காலாவதியாக உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.