முதல் முறையாக மத்திய மந்திரி ஆனார் குமாரசாமி


HD Kumaraswamy in Modi Cabinet
x

நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து புதிய அரசு இன்று பதவியேற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மோடி. அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து புதிய மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களில், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.குமாரசாமியும் ஒருவர்.

ஒரு காலத்தில் கர்நாடக பா.ஜ.க.வால் "விபத்து முதல்-மந்திரி" என்று விமர்சிக்கப்பட்ட குமாரசாமி, இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட அவர், துணை முதல்-மந்திரி சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமான தலைவரான வெங்கரமனே கவுடாவை (காங்கிரஸ்) 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story