அரியானா தேர்தல் முடிவு: முன்னாள் துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலாவுக்கு பின்னடைவு
அரியானாவின் உச்சன கலான் தொகுதியில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜேந்திரா சிங் 9,690 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார்.
குருகிராம்,
அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில், உச்சன கலான் தொகுதியில் போட்டியிட்டுள்ள, ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜே.ஜே.பி.) தலைவரான முன்னாள் துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சிங் சவுதாலாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவர் வாக்கு எண்ணிக்கையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த தொகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜேந்திரா சிங் 9,690 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். இவருக்கு அடுத்து, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்தர் சதார் பூஜ் அத்ரி உள்ளார்.
துஷ்யந்த் சிங், முன்னாள் துணை பிரதமரான தேவி லால் என்பவரின் கொள்ளுப்பேரன் ஆவார். அரியானாவின் முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனாவார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான இவர், இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் இதே தொகுதியில் போட்டியிட்டார்.
அரியானாவில் இந்த முறை தொங்கு சட்டசபை ஏற்படும் என கணிப்பு வெளியிட்ட அவர், ஆனால், ஜே.ஜே.பி. கூட்டணி போதிய தொகுதிகளை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் முக்கிய கட்சியாக உருவெடுப்போம் என்றும் கூறினார். கடந்த 2019 அரியானா சட்டசபை தேர்தலில், அவருடைய கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின்பு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது. எனினும், இந்த கூட்டணி தொடரவில்லை.