துன்புறுத்தல் வழக்கு; இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்


துன்புறுத்தல் வழக்கு; இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்
x

காங்கிரஸ் முன்னாள் அசாம் மகளிரணி தலைவியின் எப்.ஐ.ஆர். பதிவுக்கு எதிரான வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

அசாம் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவியாக இருந்தவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, கடந்த ஏப்ரலில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கடந்த காலங்களில் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தும், எனது பாலின அடிப்படையில் வேற்றுமைப்படுத்தியும் வந்துள்ளார். கட்சி தலைமையிடம் பல முறை இந்த விவகாரம் பற்றி கொண்டு வந்தும் அவர்கள் அதனை காது கொடுத்து கேட்கவே இல்லை என ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் எம்.பி. மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை டேக் செய்து டுவிட்டரில் குறிப்பிட்டார்.

அரசியல் அறிவியல் முதல் எல்.எல்.பி. வரை டெல்லி பல்கலை கழகத்தில் படித்து உள்ளேன். பி.எச்டி பட்டமும் வாங்கி இருக்கிறேன். கட்சி நலனுக்காக அமைதி காத்தேன். ஆனால், ஸ்ரீனிவாசின் துன்புறுத்தல் நிற்கவில்லை என தெரிவித்து உள்ளார்.

கடந்த 6 மாதங்களாக ஸ்ரீனிவாஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு வகிக்கும் வர்தன் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி வருகின்றனர். இதுபற்றி கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித விசாரணை கமிட்டியும் அவர்களுக்கு எதிராக அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில் கட்சிக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, அங்கித தத்தாவை 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கி, காங்கிரஸ் கட்சி அறிவித்தது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்-செயலாளர் தாரிக் அன்வர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அங்கித தத்தா அளித்த எப்.ஐ.ஆர். பதிவுக்கு எதிராக ஸ்ரீனிவாஸ், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஸ்ரீனிவாசுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டு உள்ளது. எனினும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியதுடன், வருகிற மே 22-ந்தேதி போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

அசாம் மாநிலத்திற்கும் இதுபற்றிய நோட்டீசை அனுப்பியதுடன், வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 5-ந்தேதி இவரது ஜாமீன் மனுவை கவுகாத்தி ஐகோர்ட்டு நிராகரித்தது. சீனிவாசுக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்கவும் மறுத்து விட்டது.


Next Story