ஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்


ஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்
x

வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என நடிகை மதுரா நாயக் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் இஸ்ரேலை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மதுரா நாயக்கின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய வம்சாவளியான இவர், கடந்த ஆண்டு இஸ்ரேலில் நடந்த தாக்குதலின்போது, அவருடைய குடும்பத்தினர் சந்தித்த கொடூர சம்பவங்களை நினைவுகூர்ந்து உள்ளார். புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர், யூத மதத்தினை பின்பற்றுபவர்களாகிய நாங்கள், இந்து பாரம்பரியங்களையும் கடைப்பிடிக்கிறோம்.

14-வது குழந்தையான என்னுடைய பாட்டி மற்றும் அவருடைய 13 சகோதர சகோதரிகள், இஸ்ரேலுக்கு, 1970-ம் ஆண்டு புலம்பெயர்ந்தனர். அவர்கள் சக யூதர்களுடன் ஒன்றாக சொந்த நாட்டில் வளர்ந்தனர். அது அவர்க்ளுக்கு வீடாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசத்தில், அக்டோபர் 7-ந்தேதி என்னுடைய குடும்பத்திற்கு கருப்பு நாளாக அமைந்து விட்டது என நாயக் கூறுகிறார்.

இஸ்ரேலின் டெராட் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கி சூட்டில், என்னுடைய உறவுப்பெண்ணும் அவருடைய கணவரும், அவர்களுடைய 6 மற்றும் 3 வயதுடைய இரு மகள்களின் கண் முன்னே கொல்லப்பட்டனர். அந்த 6 வயது சிறுமி மீட்கப்படும்போது, போலீசை நோக்கி நீங்கள் இஸ்ரேல் போலீசா? எனக்கு பக்கத்தில் இருக்கும் அந்த சிறுமியையும் காப்பாற்றுங்கள் என்று கூறினாள்.

வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என நாயக் கூறியுள்ளார். 6 வயது சிறுமிக்கு, தாய் மற்றும் தந்தையின் படுகொலையை அனுபவிக்க நேர்ந்த சோகத்தின் ஊடே, பக்கத்தில் சிக்கியிருக்கும் 3 வயது குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. இதனை யோசித்து பாருங்கள். இந்த சம்பவத்தில் என்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டு விட்டது.

இந்த துப்பாக்கி சூட்டின்போது, அரபு முஸ்லிம் நபர் ஒருவர் என்னுடைய சகோதரி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முயன்றார். ஆனால், அவரையும் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர். இதனால், அவர்களுடைய பயங்கரவாதத்திற்கு மதம், நிறம், வயது அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என அவருடைய குடும்பத்தினர் எதிர்கொண்ட அந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்து உள்ளார்.


Next Story