"பாபர் மசூதி பிரச்சினையின் அதே பாதையில் செல்கிறோம்"- ஞானவாபி வழக்கு தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து


பாபர் மசூதி பிரச்சினையின் அதே பாதையில் செல்கிறோம்- ஞானவாபி வழக்கு தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து
x

Image Courtesy: PTI 

ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சிலர் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, 'வீடியோ'வாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி கோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாவட்ட கோர்ட்டு இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வாரணாசி மாவட்ட கோர்ட்டு முதலில் விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த கோரிய இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து ஒவைசி கூறுகையில், " இந்த தீர்ப்புக்கு பிறகு ஒரு ஸ்திரமின்மை விளைவு தொடங்கும். பாபர் மசூதி பிரச்சினையின் அதே பாதையில் தான் நாம் செல்கிறோம். பாபர் மசூதி மீதான தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதால், இது நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று அனைவரையும் எச்சரித்தேன்.

இந்த உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மேல்முறையீடு செய்யும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story