இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் - தேர்தல் ஆணையர்


இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் - தேர்தல் ஆணையர்
x

இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

இந்த நிலையில், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதன்முறையாக 33 வாக்குச்சாவடி மையங்கள் இளைஞர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இன்று குஜராத் ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடுகிறது. இன்று மற்றும் டிசம்பர் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிற இந்த தேர்தலில் குஜராத்தில் உள்ள 4.9 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

குஜராத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 9.8 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்காளர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சமத்துவம் வழங்குவதற்கும் மரியாதை செய்வதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பங்கேற்பது நம் அனைவருக்கும் குறிப்பாக இளம் வாக்காளர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் 182 வாக்குச் சாவடிகள் மாற்றுத்திறனாளி ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 1,274 வாக்குச்சாவடிகளில் பெண் தேர்தல் பணியாளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் 4.77 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துகிறார்கள். சமீபத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் காரணமாக 3.3 லட்சத்துக்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதன்முறையாக 33 வாக்குச்சாவடி மையங்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட இளம் வாக்குச்சாவடி பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story