ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயா பச்சன் வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
மாநிலங்களவை உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சி எம்.பியான ஜெயா பச்சன், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரச்சினையைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம், ஏழை எளிய மக்களின் உரிமைகளை மத்திய அரசு மீறுகிறது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அவர், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காக்கிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம், சமூகத்தின் ஏழை எளிய மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை அரசாங்கம் மீறுகிறது. அரசாங்கத் திட்டங்களின் பலன்களை நீட்டிக்க எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதால் மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களுக்கு 10.5 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யலாம், ஆனால் அது விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாது, இதனால் எனக்கு வருத்தமாக உள்ளது" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் விவசாயிகள் மற்றும் ஏழைகள் தொடர்பான பிரச்சனைகளையும் ஜெயா பச்சன் எழுப்பினார்.