'கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள நல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்தினா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், சமீப காலமாக கவர்னர்கள் மீது மாநில அரசுகளின் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது ஆரோக்கியமான சூழலாக இல்லை என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-
"மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்திட மறுப்பதாகவும், தேவையான ஒப்புதல்களை வழங்க மறுப்பதாகவும் கூறி மாநில அரசுகள் கவர்னர்கள் மீது சமீப காலமாக வழக்கு தொடர்ந்து வரும் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை.
கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும். இதனால் நீதிமன்றங்களில் இதுபோன்ற வழக்குகள் குறையும். கவர்னர்களிடம் ஒரு வேலையை செய்யச் சொல்வதும், செய்ய வேண்டாம் என்று சொல்வதும் சங்கடமாக இருக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என்று செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.