துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு:

மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.20¾ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் இருக்கும்.

இதை பயன்படுத்தி சில பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருகிறார்கள். அதை கண்காணித்து பிடிக்க விமான நிலையத்தில் சுங்க வரித்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவை சேர்ந்தவர்கள்

இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று மங்களூரு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல ஒரு விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது உடைமைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர்கள் என்பதும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

கைது

அதாவது அவர்கள் தங்களது பெட்டி மற்றும் டிராவல் பைகளில் ரகசிய அறை அமைத்து அதில் 13 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்கள், 31 ஆயிரத்து 800 ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்காம்ஸ், 16 ஆயிரம் சவுதி ரியால், 160 குவைத் தினார் ஆகியவற்றை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த இந்திய மதிப்பு ரூ.20 லட்சத்து 71 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை பிடித்து பஜ்பே விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story