உலக பசி குறியீட்டு பட்டியலில், மோசமான நிலையில் இந்தியா; அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?
உலக பசி குறியீட்டு பட்டியலில் மோசமான நிலையில் இந்தியா உள்ளது. 121 நாடுகளில் 107-வது இடத்தில் இருக்கிறது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக பசி குறியீட்டு பட்டியல்
121 நாடுகளின் பசி நிலையை படம் பிடித்துக்காட்டுகிற 'குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்' என்று அழைக்கப்படுகிற உலக பசி குறியீட்டு பட்டியல் -2022 வெளியாகி உள்ளது. இந்தப்பட்டியல், உலக அளவிலும், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பசி நிலையை விரிவாக அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு கருவியாக அமைகிறது.
மோசமான நிலையில் இந்தியா
நமது நாடு ஒரு பக்கம், மிக வேகமாக வளர்ந்து வருகிற பெரிய பொருளாதார நாடாக உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் பசிக்குறியீட்டு பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது என்பது வியப்பை அளிப்பதாக உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா, 121 நாடுகளில் 107-வது இடத்தில் உள்ளது. இந்தியா 29.1 புள்ளிகள் எடுத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு, 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்திலும், 2020-ம் ஆண்டு 94-வது இடத்திலும் இருந்தது. எனவே 2020, 2021-ம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் பசி நிலை மோசமாக உள்ளது.
ஆசியா கண்டத்தில் இந்தியாவை விட மோசமாக உள்ள ஒரே நாடு, தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் மட்டும்தான். அந்த நாடு 109-வது இடத்தில் உள்ளது. உலக பசி குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்காளதேசம் 84-வது இடத்திலும், நேபாளம் 81-வது இடத்திலும், இலங்கை 64-வது இடத்திலும் உள்ளது. எனவே இந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் நிலை மோசமாக இருக்கிறது.
குழந்தைகள் வீணாகும் விகிதம்
* குழந்தைகள் வீணாகும் விகிதத்தை பொறுத்தமட்டில், இந்தியா 19.3 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. இது உலகிலேயே அதிக விகிதம் ஆகும். இந்த குழந்தைகள் வீணாதல் விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வலுவாக முன்னறிவிக்கும் நிலை ஆகும்.
* இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம், 2018-2020 ஆண்டுகளில் 14.6 சதவீதமாக இருந்தது. அது 2019-2021 காலகட்டத்தில் 16.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, உலகளவில் 82 கோடியே 80 லட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையில் உள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு 22 கோடியே 43 லட்சம் ஆகும்.
* குழந்தை வளர்ச்சி குறைவு, குழந்தைகள் இறப்பு என 2 பிரிவுகளில் இந்தியா நிலை மேம்பட்டுள்ளது. 2012-16 ஆண்டுகளில் குழந்தை வளர்ச்சி குறைவு பிரச்சினை விகிதம் 38.7 சதவீதம் ஆகும். இதுவே 2017-21-ல் 35.5 சதவீதமாகி உள்ளது. இதேபோன்று குழந்தைகள் இறப்பு விகிதம் 2014-ல் 4.6 சதவீதமாக இருந்தது. இது 2020-ல் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது.
தலைவர்கள் கருத்து
உலக பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா மோசமான நிலையில் இருப்பது குறித்த அரசியல் தலைவர்கள் கருத்து வருமாறு:-
ப.சிதம்பரம் (காங்கிரஸ் மூத்த தலைவர்):-
ஊட்டச்சத்து குறைபாடு, பசி, குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, குழந்தைகள் வீணாகுதல் ஆகிய உண்மையான பிரச்சினைகளுக்கு நமது மரியாதைக்குரிய பிரதமர் எப்போது தீர்வு காண்பார்? 22.4 கோடி மக்கள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். இந்துத்துவா, இந்தி திணிப்பு, வெறுப்பை பரப்புதல் ஆகியவை பசிக்கு மருந்தல்ல.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர்):-
2014-ம் ஆண்டில் இருந்து உலக பசிகுறியீட்டு பட்டியலில் இந்தியா ஆபத்தான, கூர்மையான சரிவு நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு மோடி அரசு பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளது. குறைவான உணவு பொருட்களே இருப்பில் உள்ளன. விலைவாசியோ உயர்ந்து வருகிறது. இந்த இருளான இந்தியாவின் சகாப்தத்துக்கு அரசு பொறுப்பேற்றாக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.