தேர்வு எழுத வந்த பெண்ணின் தாலியை கழற்ற கூறிய அதிகாரிகள்: கர்நாடகாவில் பரபரப்பு
தாலியை கழற்றி கொடுத்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படும் என கூறி உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கர்நாடக தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின்போது புளூடூத் பயன்படுத்தி முறைகேடு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக யாதகிரி, கலபுரகியில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக நடைபெறும் தேர்வின்போது, பலத்த சோதனைக்கு பிறகுதான் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேவையற்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நேற்று தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதுவதற்கு வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் பெண் ஒருவர் தாலி அணிந்து இருந்தார்.
அதை கழற்றிவிட்டு தேர்வுக்கு செல்லுமாறு அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். அப்போது தாலியை கழற்றி கொடுத்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என கூறி உள்ளனர். இதையடுத்து அந்த பெண் தான் அணிந்திருந்த தங்க தாலியை கனத்த இதயத்துடன் கழற்றி, தனது உறவினரிடம் கொடுத்து சென்றார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த தாலியை உடனடியாக உரிய பெண்ணிடம் கொடுக்குமாறு கூறி அறிவுறுத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நடவடிக்கை "இந்துக்களுக்கு மட்டும்தானா?" என்று பாஜக எம்எல்ஏ பசங்கவுடா யத்னால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, ஹிஜாப் அணிந்த பெண்களையும் அதிகாரிகள் சோதனை செய்ததாகவும், ஆனால் அவர்களை உள்ளே அனுமதித்ததாகவும், தனது தாலியை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்து கலாச்சாரத்தில், தாலியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும்போது அவற்றை அகற்றுவோம். நான் எனது தாலியை, மெட்டியை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன். எப்படி ஹிஜாப் அணிந்த மாணவிகளை சரிபார்த்து அனுமதித்தார்களோ, அதே போல் எங்களையும் சரிபார்த்து உள்ளே அனுமதித்திருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறினார்.
இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.