பள்ளியில் பாலின சமத்துவத்தை அமல்படுத்துவது மதத்தை அவமரியாதை செய்யும் முயற்சி ; எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
கேரள அரசின் பாலின நடுநிலை கொள்கை பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாக எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாலின நடுநிலையை கொள்கையை மேம்படுத்துவம் வகையில் மாணவ-மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடை கொள்கை பல்வேறு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள இந்த சீருடை கொள்கைக்கு கேரளாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு சார்பில் கோழிக்கோடில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ எம்.கே.முனீர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியாதாவது, பாலின நடுநிலை சீருடை என்ற பெயரில் மத மறுப்பை கொண்டு வர மாநில அரசு ஏற்கனவே திட்டம் தீட்டிவிட்டது.
பாலின நடுநிலை சீருடை மாணவர்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். பாலின நடுநிலை சீருடை பெண்களுக்கு (மாணவிகளுக்கு) எதிரான பாகுபாட்டை கொண்டு வரும் செயல். மாணவர்களுக்கு சுடிதார் பொறுத்தமாக இருக்காதா?. முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பயணத்தின்போது சேலை, பிளவ்ஸ் ஏன் அணிந்துகொள்ளக்கூடாது? அவரது மனைவியை ஏன் பெண்ட் அணிய சொல்லக்கூடாது?
பாலின சமத்துவத்தை அமல்படுத்தி பள்ளிகளில் மதத்தை அவமரியாதை செய்ய மாநில அரசு ஊக்குவித்து வருகிறது' என்றார்.
இதனிடையே, கேரள அரசின் பாலின நடுநிலை கொள்கை பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாக எம்.எல்.ஏ. எம்.கே.முனீரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.