ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
டெஹ்ரான்,
ஈரான்-அஜர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரமாண்ட அணை கட்டியுள்ளன. இதை திறந்து வைப்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 19-ந் தேதி அஜர்பைஜான் சென்றார். அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். அணை திறப்பு விழாவை முடித்துக் கொண்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் 3 ராணுவ ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டனர்.
2 ஹெலிகாப்டர்கள் ஈரானின் டேப்ரிஸ் நகரில் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், அதிபர் ரைசி, வெளியுறவு மந்திரி உசைன் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்து மாயமானது.
அதை தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாயமான ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதும், அதில் பயணித்த அதிபர் ரைசி உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.
ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் மற்றும் வெளியுறவு மந்திரி உள்பட 9 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் சோகத்தில் ஆழ்த்தியது. நாட்டில் 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மே 22-ந் தேதி நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ஈரான் அரசு அறிவித்தது.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்கு தலைநகர் டெஹ்ரானில் நேற்று நடந்தது.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனி மத சடங்குகளை செய்தார்.
உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் மீது ஈரான் கொடி போர்த்தப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு சவப்பெட்டியிலும் உயிரிழந்தவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
மத சடங்குகள் முடிந்ததும் சவப்பெட்டிகள் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டிகள் ஏற்றப்பட்ட வாகனம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றது. இந்த ஊர்வலம் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.
அங்கு நடந்த இறுதி சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் இந்தியாவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இறுதி சடங்கில் பங்கேற்று, மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினார்.