கோழிக்கோட்டில் இருந்து 182 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் உரசியதால் தொழில்நுட்ப கோளாறு திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு 182 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் உரசி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
கோழிக்கோட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு 182 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் உரசி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா தமாமுக்கு நேற்று காலை 9.45 மணியளவில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 176 பயணிகள், 6 ஊழியர்கள் உள்பட 182 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானத்தின் பின்பாகம் ஓடு பாதையில் தரையில் உரசியபடி மேல் நோக்கி பறக்க தொடங்கியது. இதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் விமானத்தில் அதிக அளவு எரிபொருள் இருந்ததால் அவசரமாக தரையிறக்கும் போது தீ விபத்து ஏற்பட வாய்ப்பாகும் என கருதப்பட்டது. இதற்காக கோழிக்கோடு விமான நிலையத்தை சுற்றி வானில் 3 முறை வட்டமடிக்கப்பட்டது.
பின்னர் கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு விமானம் கொண்டு வரப்பட்டது. அங்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் 8 முறை வானத்திலேயே விமானம் வட்டமடித்தது. இதனால் பயணிகள் பீதியிலேயே இருந்தனர்.
அதன்பின்பு நண்பகல் 12.15 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சமயத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பிற விமானங்கள் தரை இறங்கவோ, புறப்பட்டு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்ட பின்பு தான் அவசர நிலை விலக்கி கொள்ளப்பட்டது.
இதற்கிடையே விமானம் புறப்பட்டபோது தவறான முறையில் இயக்கிய விமானிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு அந்த விமானம் மாற்று விமானி மூலம் மாலை 5 மணிக்கு தமாம் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.