முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்


முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று டெல்லி பயணம்
x

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவரது கட்சி வலுவாக உள்ள பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரசுக்கு எதிராக குமாரசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டதாக அவர் குறை கூறி வருகிறார்.

அதே நேரத்தில் சமீபகாலமாக பா.ஜனதாவுக்கு எதிராக குமாரசாமி மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, காங்கிரஸ் அரசுக்கு எதிராக குமாரசாமியுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதே போல் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காத கட்சி ஏதாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதன் மூலம் பா.ஜனதாவுடன் தாங்கள் கைகோர்க்க இருப்பதை அவர் மறைமுகமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தலைவர்களை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் குமாரசாமி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைப்பது உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை கூட்டணி அமைந்தால், தென்மாவட்டங்களில் பலமாக உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சி அந்த தொகுதிகளில் போட்டியிடும். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story