இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளா அரசின் பிரத்யேக ஓ.டி.டி. தளம் அறிமுகம்
இந்த ஓ.டி.டி. தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என கேரளா அரசாங்கம் பெயரிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான ஓ.டி.டி. தளத்தை கேரளா அரசு அறிமுகம் செய்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான ஓ.டி.டி. தளத்தை அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த ஓ.டி.டி. தளத்திற்கு 'சி ஸ்பேஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஓ.டி.டி தளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி, இந்த ஓ.டி.டி. தளமானது மலையாள சினிமாவின் முன்னேற்றத்திற்கு முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து பேசியதாவது, "பல தனியார் ஓ.டி.டி தளங்கள் அதிக அளவில் பேசப்படும் மொழியில் உள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அதற்கு முக்கிய காரணம் லாபத்தை அதிகரிப்பதாகும். இதில் கலை மற்றும் கலாசார மதிப்புடைய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தளம் மலையாள மொழியைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் என்ற பன்முக நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சி ஸ்பேஸ் ஓ.டி.டி. தளம் மாநில திரைப்பட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்கப்படும் எனவும், மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓ.டி.டி. தளத்தில் 35 திரைப்படங்கள், 6 ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படம் உள்பட 42 திரைப்படங்கள் தற்போது உள்ளன. இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நிபுணர்களைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ. 75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.